Sunday, September 5, 2010

Enviro Meet July 2010





ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு சூழல் சந்திப்பு நிகழ்ச்சியைக் கடந்த 25.07.2010 ஞாயிறன்று மாலை 05:30மணியளவில் கோவை தமிழ்நாடு ஓட்டலில் நடத்தியது.

இதில் 'பல்லுயிர் பரவலில் கோவில் மரங்கள் (ஸ்தலவிருட்சங்கள்)' என்ற தலைப்பில் முனைவர் மா. குணசேகரன் சிறப்புரையாற்றினார்.

கோயில்கள் என்பன வழிபாட்டு இடமாக மட்டும் இல்லாமல் சமூகச் செயல்பாடுகளின் ஆலோசனை மையங்களாகச் செயல்பட்டு வந்தன. பழந்தமிழ் இலக்கியங்களில் கடிமரம் என்ற பெயரில் கோயில் தல மரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவை அந்தக் கோவிலின் மூலவருக்கு இணையாகவும் வைத்து வணங்கப் பட்டு வந்தன.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் 80% தலமரங்கள் உள்ளன. இவற்றில் வில்வம், வன்னி, மகிழம், அரசு, புன்னை ஆகிய மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள ஈந்தை, அசோகம், சந்தனம் ஆகிய மரங்களும் இதில் அடங்கும்.

90 விதமான பறவைகளும், 37 விதமான பட்டாம்பூச்சிகளும், 13 வகையான ஊர்வன இனங்களும், 6 விதமான வவ்வால் வகையினங்களும் இந்த மரங்களில் வாழ்கின்றன.

தாமிரபரணி நதிக் கரையில் உள்ள திருப்புடை மருதூரில் தலமரத்தில் கூடுகட்டி வாழும் பறவைகளை அவ்வூர் மக்கள் பாதுகாக்கின்றனர். விழாக் காலங்களில் பட்டாசுகளை வெடிக்காமல் இருந்து அவை அந்த ஊரை விட்டுச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

தலமரங்கள், மதரீதியான வழிபாட்டிற்கும், அழியும் நிலையில் உள்ள மர இனங்களைக் காத்து வைத்தல் என்ற நிலையிலும், மருந்தாகும் மதிப்புடைய மரங்களை அழிபடாமல் வைத்திருப்பது என்ற அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.

நமது காடுகளில் தென்படாத பலவித மரங்களும் தலமரங்களாகக் கோவில்களில் இருப்பது அவற்றின் மீதான பாதுகாப்பு நடவடிக்கைகளை வேண்டி நிற்பதாய் உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் இரா. நிக்கோலஸ் வாழ்துரையற்றினார். குஜராத் மாநிலத்தில் ஆக்கிரமிப்புகளினாலும் சட்ட விரோத சுரங்க பணிகளினாலும் பாதிப்புக்கு உள்ளாகும் கிர் காடுகளை காப்பாற்ற பாடுபட்ட சுற்றுச்சூழல் போராளி அமித் ஜெத்வா சமூக விரோதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

ஓசை அமைப்பின் சார்பில் சூழல் போராளி அமித் ஜெத்வாவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. நிகழ்ச்சியில் ஓசைத் தலைவர் காளிதாசன், செயலாளர் அவைநாயகன், துணைத்தலைவர் கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பங்கேற்றனர்.



Source : greenosai

No comments:

Post a Comment