ஒரு சராசரி மனிதனின் இதயம் ஒரு நாளுக்கு 1,03,689 முறை துடிக்கிறது. அவனுடைய ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல்கள் பயணம் செய்கிறது. அவன் 70,00,000 மூளை செல்களைப் பயிற்றுவிக்கிறான். 438 கனஅடி காற்றை உள்ளே இழுக்கிறான். 23,000 தடவை சுவாசிக்கிறான். 750 தசைகளை அசைக்கிறான். ஒன்றரைக் கிலோ உணவை உட்கொள்கிறான். ஆனால் இத்தனையையும் செய்வதில் அவனுக்குக் களைப்போ, தளர்ச்சியோ ஏற்படுவதில்லை. காரணம் இவை எல்லாம் அவன் முயற்சியில் நடப்பதில்லை. தன்னிச்சையாகவே நிகழ்கின்றன.
இந்தச் செயல்கள் ஒவ்வொன்றையும் மனிதன் தானாக பிரக்ஞையோடு செய்ய வேண்டுமென்றால் மனிதன் ஒரு நாள் கூட வாழ முடிவது சந்தேகமே. அவனுக்குள்ளே இயற்கையாகவே இருக்கும் ஒரு கிரியா சக்தி இவை அனைத்தையும் பார்த்துக் கொள்கிறது. அனைத்தையும் சீராகவும், ஒழுங்கு முறையுடனும், தொடர்ந்தும் இவை நடக்கும்படியே அவன் படைக்கப்பட்டு இருக்கிறான்.
இயற்கையாக நடக்கும் இந்த செயல்களில் குளறுபடி இல்லாமல் போக இன்னொரு முக்கிய காரணம், இயற்கை தன் செயல்களை அடுத்தவருக்காகவோ, சாதனை புரிந்து காட்டுவதற்காகவோ, போட்டிக்காகவோ செய்வதில்லை. எதெல்லாம் அவசியமோ அதை மட்டுமே சீராக இயற்கை செய்கிறது. இன்னொரு இதயம் நூறு முறை அதிகம் துடிக்கிறது, நானா சளைத்தவன் இதோ இருநூறு முறை அதிகம் துடித்துக் காட்டுகிறேன் என்று எந்த இதயமும் போட்டி போட்டு துடிப்பதில்லை. அடுத்த மனிதனுடைய ரத்த ஓட்டத்தை விட ஆயிரம் மைல் அதிகம் நான் ஓடிக் காட்டுவேன் எந்த மனிதனுடைய ரத்த ஓட்டமும் வேகம் அதிகரித்துக் காட்டுவதில்லை.
இன்னொரு முக்கிய காரணம், தன் செயல்களை இயற்கை பெரிதாக நினைப்பதோ, அதனால் சலிப்படைவதோ இல்லை. தொடர்ந்து நூறு நாள் துடித்தாயிற்று, நான் என்ன எந்திரமா?, இரண்டு நாள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து இதயம் இயங்க முரண்டு பிடிப்பதில்லை. அது சக்தியுள்ள காலம் வரை தன் வேலையை ஒழுங்காகச் செய்ய முடிவது அதனாலேயே.
இயற்கை மனித உடல் இயக்கத்தில் இத்தனை சாதனைகளை சத்தமில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் செய்கிறது. அவனாக அவன் பழக்க வழக்கங்களாலும், தவறான உணவுப் பழக்கங்களாலும் அந்த உடலைப் படாதபாடு படுத்துகிறான். அந்த உடலுக்குத் தேவையானதைத் தராமல், தேவையில்லாததைத் திணித்து அதன் எல்லா செயல்பாட்டுக்கும் ஏகப்பட்ட இடைஞ்சல்கள் செய்கிறான். அத்தனையையும் சமாளித்துக் கொண்டு அது முடிந்தவரை ஒழுங்காக இயங்கப் பாடுபடுகிறது.
மனிதன் தன் உடல் இயக்கத்தில் இருந்தே ஏராளமான பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஒழுங்குமுறை, சலிப்பின்மை, எல்லாத் தடைகளையும் மீறி சிறப்பாகச் செயல்படுதல் போன்றவை அந்தப் பாடங்களில் அடங்கும். இயற்கையின் செயலில் அவசரமில்லை. அதே நேரத்தில் தேக்கமும் இல்லை. தேவையானதை தேவையான வேகத்தில் செய்கிறது. இதுவும் மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம். மனிதன் இயற்கையைப் பின்பற்றுவது முடியாத காரியம் அல்ல. ஏனென்றால் அவனும் இயற்கையின் படைப்பே. இயற்கையோடு ஒட்டியும் தன் இயல்பை உணர்ந்தும் செயல்பட்டால் அவன் அடைய முடியாத சிறப்பில்லை.
இயற்கை இது வரை படைத்த பல்லாயிரக் கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவர் போல் இன்னொருவரைப் படைத்ததில்லை. இது பிரமிப்பூட்டும் உண்மை. சமூகம் தான் சில சமயங்களில் எல்லோரையும் ஒரே வார்ப்பில் வார்த்து விடும் முயற்சியில் ஈடுபட்டு மனிதர்களைக் குழப்புகிறதே ஒழிய இயற்கை அந்த முட்டாள்தனத்தை இது வரை செய்ததில்லை. இயற்கையின் தனிப்பட்ட முத்திரை தனித்தன்மையே. இயற்கை மனித உடல் இயக்கங்களை ஒரே போல் உருவாக்கி இருந்தாலும் மற்ற விஷயங்களில் தன் தனி முத்திரையைப் பதித்தே அனுப்புகிறது.
ஒவ்வொரு மனிதனும் இயங்கத் தேவையான நுண்ணறிவை அவன் உடலுக்குத் தன்னிச்சையாக ஏற்படுத்தி உலகிற்கு அனுப்பி இயற்கை தன் பங்கைக் கச்சிதமாகச் செய்து விடுகிறது. இங்கு வந்த பின் வாழ வேண்டிய தன் பங்கை மனிதன் அதே கச்சிதத்துடன் செய்ய ஆறறிவையும் தந்து உதவியிருக்கிறது. அவனுக்குள்ளே தனித் திறமைகளையும் ஏற்படுத்தி அவன் பிரகாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. மனிதன் பிரகாசிப்பதும், மங்கிப் போவதும் அவன் அந்தத் திறமைகளைப் பயன்படுத்தி வாழும் விதத்தில் தான் தீர்மானமாகிறது.
இயற்கையை ஒட்டி மனிதன் வாழும் போது, தெளிவாக ஆழ்ந்து சிந்திக்கும் போது தனக்குள்ளே இருக்கும் தனிச்சிறப்புகளை மனிதன் உண்மையாக உணர்கிறான். அப்படி உணரும் போது அதை வெளியே கொண்டு வர என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முற்படுகிறான். விதைக்குள் இருக்கும் செடி வெளியே வராமல் வேறெங்கு போகும்? அவனாகவே அலட்சியப்படுத்தி அழிக்காத வரை எந்த திறமையும் அழிந்து போவதில்லை.
சரி இயற்கையை ஒட்டியோ, பின்பற்றியோ வாழ்கிற விதம் தான் என்ன? அதற்கு அடையாளங்கள் தான் என்ன? உங்கள் லட்சியங்கள் உங்கள் இயற்கையான இயல்பை ஒத்து இருப்பது, அவற்றில் ஈடுபடும் போது சலிப்பு தோன்றாமல் இருப்பது, அடுத்தவனுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதை விட இதை நான் சாதித்து விட வேண்டும் என்ற எண்ணம் பிரதானமாக இருப்பது, சில்லறை அசௌகரியங்களைப் பெரிது படுத்தி குற்றச்சாட்டுகளைத் தயார் செய்வதை விட அதிகமாக அவற்றை நீக்கும் வழிகளை ஆராய்வது, அடுத்தவர்கள் சாதனைகளில் வயிறெரியாமல் இருப்பது, தன்னைப் போலவே அடுத்தவர்களையும் மதிப்பது, அடிக்கடி மனநிறைவை உணர்வது, விடாமுயற்சியுடன் உற்சாகமாக உழைப்பது இதெல்லாம் சில அடையாளங்கள்.
இயற்கையிடம் இருந்து கற்றுக் கொண்டு நாமும் இயற்கையாக சிறப்பாக வாழ்வோமா?
-என்.கணேசன்
Source : http://enganeshan.blogspot.com
No comments:
Post a Comment