தமிழகத்தில் குடிபுகுந்த சமயங்களுள் பௌத்த சமயம் குறிப்பிடத்தக்கதாகும். சங்க இலக்கியப் பாடல்களில் பௌத்தம், புத்தர் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. மன்னர்கள், செல்வந்தர்களின் (வணிகர்கள்) ஆதரவு பௌத்த சமயத்தைத் தமிழகத்தில் வேரூன்றச் செய்ததாகக் குறிப்பிடலாம். பௌத்த சமயத்தின் மனிதநேயக் கோட்பாடுகள், அறக் கருத்துகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றன. வைதிக இந்து சமயம், பௌத்த சமயக் கோட்பாடுகள் சிலவற்றை உள்வாங்கிக் கொண்டாலும், பௌத்தம் தனக்கே உரிய சிறப்புப் பண்புகளையும், மனிதநேயத் தத்துவங்களையும் உலக மக்களுக்கு அளித்த பெருமைக்குரியதாக விளங்குகிறது.
வட இந்தியாவில் கௌதமபுத்தர் வாழ்ந்த காலம் கி.மு. 567-487 ஆகும். வைதிக சமய வேள்விச் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து பௌத்தமதம் தோன்றினாலும் எளிமையான சமயக் கோட்பாடுகளைக் கொண்டிருந்ததால் வேகமாகப் பரவத் தொடங்கியது எனலாம். கௌதமபுத்தரை, சமணத் தீர்த்தங்கரர்களுள் இறுதியானவராக "வர்த்தமான மகாவீரன் ஒன்று விட்ட சகோதரர்' என்று சமண இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. புத்தர் உபதேசித்த தர்மம், ஏற்படுத்திய சங்கம் மற்றும் புத்தர் ஆகிய மூன்றும் பௌத்த மும்மணிகள் என்று கூறப்பட்டன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, தமிழகத்தில் பௌத்தத் துறவிகள் வாழ்ந்தனர். இளம் போதியார் முதலியவர்கள் சங்க காலத்தில் வாழ்ந்த பௌத்த சமயப் புலவர்கள் ஆவர். பௌத்தமானது ஏறத்தாழ அசோகன் காலத்தில் தென்னாட்டில் புகுந்தது என்பதை அசோகரது சிறிய பாறைக் கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.
அசோகர் தம் ஆட்சிக் காலத்தில், தம் மகளான சங்கமித்திரையை (கி.மு. 272-232) புத்தமதப் பிரச்சாரம் செய்ய, தென்னாட்டிற்கும் இலங்கைக்கும் அனுப்பினார். பொதிய மலைப் பகுதியில் ‘சங்கமித்திரை மேடு' என்ற ஒரு பகுதி இருப்பதால் சங்கமித்திரை பாண்டிய நாட்டிலும் பௌத்தமதப் பிரசாரம் செய்தார் என்று அறிய முடிகிறது. கலிங்கப்போர் முடிந்த பின் அசோகன் காலத்தில் அசோகனின் தூதுவர்கள் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கொற்கையிலும், பிற இடங்களிலும் பரவி பௌத்த சமயத்தை வளர்த்தனர் எனத் தெரிய வருகிறது.
இலங்கையில் பௌத்தம்
முதலில் தென்னாட்டிற்கும் பிறகு தென்னாட்டிலிருந்து பிற கீழை நாடுகளுக்கும் பௌத்த சமயம் பரவத் தொடங்கியது. பௌத்தம் இலங்கைக்குப் பரவிய விதம் குறித்துப் பல்வேறு முரண்பாடான கருத்துகள் நிலவுகின்றன. இலங்கையின் பௌத்த நூலான மகாவம்சம், பௌத்த சமய பிரசாரத்திற்காக சென்ற மகேந்திரனும், சங்கமித்திரையும் வான்வழியாக இலங்கையை அடைந்ததாகக் கூறுகிறது. இக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படா விட்டாலும் ஆதம் பாலத்தின் வழியாக அசோகனது மக்கள் இலங்கைக்குச் சென்றிருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் பௌத்த சமயச் செல்வாக்கு
புத்தருக்கென அமைக்கப்பட்ட கோயில்கள் சேதியம் (சைத்யம்) எனப்பட்டது. ஆண் துறவிகள் ‘பிட்சுகள்' என்றும், பெண் துறவிகள் ‘பிட்சுணிகள்' என்றும் அழைக்கப்பட்டனர். காஞ்சி மாநகர் பௌத்தர்களின் மையமாக விளங்கியது. ஸ்ரீவிஜய மன்னன் விஜயோத்துங்க வர்மன் தன் தந்தையாரின் பெயரில் ‘சூடாமணிவர்ம விகாரம்' என்ற பௌத்தக் கோயிலைக் கட்டினான். இதற்கு ஆனைமங்கலம் என்ற கிராமம் பள்ளிச்சந்தமாக விடப்பட்டது. முதலாம் இராஜராஜன், இப்பௌத்த கோயிலுக்கு ஆதரவளித்தான். புத்தமங்கலம், தஞ்சையில் இருந்த விரங்குதாச, வேணுதாச மடங்கள் பௌத்த சமய மையங்களாகத் திகழ்ந்தன.
அகழாய்வு ஆதாரங்கள்
நாகப்பட்டினத்தில் நிகழ்த்தப் பெற்ற அகழாய்வுகளில் மட்டும் முந்நூற்றுக்கும் அதிகமான வெள்ளியிலான புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிலைகள் அனைத்தும் முற்காலச் சோழர்கள் காலத்திலிருந்து விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. இவ்வகழ்வாய்வின் வாயிலாக பௌத்த சமயம் தமிழக செல்வாக்குப் பெற்றிருந்ததை உணர முடிகிறது. பௌத்தத் துறவிகளின் சிலைகள் காவிரிப்பூம்பட்டினத்திலும் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன. 1964-65இல் பல்லவனேசுவரத்தில் நிகழ்த்தப்பெற்ற அகழாய்வில் புத்தவிகாரை கண்டறியப்பட்டது. அதில் மொத்தம் ‘ஐந்து' சதுர அறைகள் காணப்படுகின்றன. இங்கு ‘புத்தன் சுடுமண் உருவம்' இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்விகாரை கி.பி. 4-5ஆம் நூற்றாண்டினது என்று நடன. காசிநாதன் என்பவரால் நிறுவப்பட்டுள்ளது.
பக்தி இயக்கமும் பௌத்த சமயமும்
தமிழகத்தில் பக்தி இயக்கமானது கி.பி. 6ஆம் நூற்றாண்டளவில் தொடங்கியது. வைதிக சமயங்களுக்கு சமணம், பௌத்தம் போன்ற புறச்சமயங்கள் வெறுப்பைத் தந்தன. அரசர் செல்வாக்குப் பெற்ற சமயம் ஏனைய சமயங்களை ஏளனம் செய்யத் தலைப்பட்டது. சைவ சமயத்தவர்கள் மேற்கொண்ட அனல்வாதம் - புனல்வாதம் போன்றவை பௌத்த சமயத்தைப் புறந்தள்ளின. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இனிய தமிழில் பாடல்களைப் பாடி இறையுணர்வுடன் பக்தி உணர்வையும் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் ஊட்டினர். மன்னர்களின் ஆதரவின்மை, வைதிக சமயங்களின் புத்துயிர்ப்பு, பௌத்த சமயங்களில் இருந்த புரிந்துகொள்ள இயலாத தத்துவக் கோட்பாடுகள் போன்றவை பௌத்த சமயம் வலுக்குன்றக் காரணங்களாக அமைந்தன. மேலும் கி.பி. 8-9ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட குகையிடிக் கலகத்தின் வாயிலாக பௌத்த குகைகள் பெரும்பாலானவை வைதிகச் சமயங்களுக்கு உயதாக்கப் பட்டன.
அசோகனுக்குப் பின்பு வடஇந்தியாவிலும், பக்தி இயக்கத் தின் விளைவாக தென்னிந்தியா விலும் பௌத்த சமயம் வீழ்ச்சியுறத் தொடங்கியதை சீனப் பயணி யுவான் சுவாங்கின் (கி.பி. 630) குறிப்புகள் உணர்த்தும். யுவான் சுவாங், பௌத்த சமயத்தின் சுவடுகள் இந்திய மண்ணிலிருந்து மறைந்து கொண்டிருப்பதைக் கண்டதோடு, அந்த அடையாளங்கள் முற்றிலும் அழியும்போது பௌத்த சமயம் முற்றிலும் அழிந்து மறைந்து விடும் என்று தன்னிடம் ஆரூடம் கூறப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
பக்தி இயக்க காலகட்டத்திற்குப் பின்னர், பௌத்த சமய விகாரைகள், மட்டுமல்லாது பௌத்த பௌத்த சமயக் கோட்பாடுகள் போன்ற வற்றையும் வைதிக சமயங்கள் பெற்றுக்கொண்டன. பௌத்த சமயம் தமிழகம் முழுவதும் பரவியிருந்த காலத்தில் புத்தருக்குப் பல சிற்றூர்களில் கோயில்கள் கட்டப்பட்டன. புத்தருக்குய பெயர்களுள் "தருமராஜர்' என்ற பெயரும் ஒன்று. பௌத்த சமயம் வீழ்ச்சியுற்ற பின்னர் தர்மராஜர் கோயில்கள் பாண்டவருள் மூத்தவ ரான, தர்மராஜன் கோயில்களாக மாற்றப்பட்டதாக மா. இராச மாணிக்கனார் கருதுவார்.
‘விநாயகன்' என்ற பெயர் புத்தருக்கும் உரியதாகும். புத்தர் பிறக்கும்போது அழகிய வெள்ளை யானையின் உருவத்தில் இருந்தார் என்று புத்த ஜாதகக் கதைகள் கூறும். விநாயகர் அறிவும், செல்வமும் தரும் தெய்வம் என்று பௌத்தர்கள் கருதினர். விநாயகன் என்ற பெயருடன் இருந்த புத்தரது கோயில்கள் ‘பிள்ளையார்' கோயில்களாக மாற்றப்பட்டதாக மயிலை. சீனிவேங்கடசாமி குறிப்பிடுவார். புத்தர் திருமாலின் அவதாரமாக்கப்பட்டார். புத்தரது வழிபாடு, விநாயகர் வழிபாடாக வைதிக சமயத்தில் புகுத்தப்பட்டது. இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது பௌத்த சமயம் அதன் கோட்பாடுகளும் அழியவில்லை என்பதும், வைதிக சமயத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது என்பதும் மறுக்க இயலாத உண்மை.
இல. கணபதிமுருகன்
நன்றி: தினமணி
நாகப்பட்டினத்தில் நிகழ்த்தப் பெற்ற அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை வெள்ளியிலான புத்தர் சிலைகள் அல்ல. அவை செப்புத்திருமேனிகள். அண்மையில் வெளியான எனது கட்டுரையில் நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனி பற்றிய குறிப்பு உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்படின் கீழ்க்கண்ட இணைப்பில் வெளியான எனது கட்டுரையையோ எனது வலைப்பூவையோ காணலாம். http://www.ponnibuddha.blogspot.in/2013/05/1993-2012.html
ReplyDelete