கௌதம புத்தர் மகா பரிநிர்வாணமடைந்த 2550-ம் ஆண்டை மத்திய, மாநில அரசுகள் இப்போது கொண்டாடுகின்றன. இதற்காக இந்திய அரசு பத்து கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. பௌத்தம் குறித்த மாநாடு ஒன்றை நடத்துவது, அதற்கு உலகமெங்குமிருந்து அறிஞர்களை அழைப்பது, நாளந்தாவில் உள்ள பௌத்த மடாலயத்தைப் புதுப்பிப்பது எனப் பல்வேறு திட்டங்களை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அம்பிகா சோனி அறிவித்திருக்கிறார். பீகார், உத்தரப்பிரதேசம் முதலான மாநில அரசுகளும் இந்த ஆண்டை மிக விமரிசையாகக் கொண்டாடி வருகின்றன. மற்ற இடங்களில் கடந்த மே மாதத்திலேயே இந்தக் கொண்டாட்டங்கள் துவங்கி விட்டாலும், தமிழ்நாட்டில் இப்போதுதான் நமது மாநில அரசு விழா ஒன்றை நடத்தியுள்ளது.
பௌத்தத்தை வடஇந்திய மதம் என்று பலர் சொல்வதுண்டு. ஆனால், அது உண்மையல்ல... பௌத்தத்துக்கும் தமிழுக்குமான உறவு மிகவும் தொன்மையானது. இந்தியாவின் பிற மாநிலங்களில் பௌத்தம் அழிந்து போனதற்குப் பிறகும்கூட தமிழ்நாட்டில் அது தழைத்துச் செழித்திருந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கண்டெடுக்கப்பட்ட செம்பு மற்றும் கல்லால் ஆன புத்தர் சிலைகளை ஆராய்ந்த கலை வரலாற்று அறிஞர் வித்யா தெஹேஜியா என்பவர், ‘‘இதுவரை நம்பப்பட்டு வந்ததைவிடவும், நீண்ட காலத்துக்கு மிகுந்த பிடிப்போடு பௌத்தம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. அது 15 மற்றும் 16-ம் நூற்றாண்டுகள் வரை தமிழ்நாட்டில் உயிர்த்துடிப்போடு இருந்திருக்கிறது’’ எனக் குறிப்பிடுகிறார். இன்றைக்கும்கூட தமிழ்நாட்டின் பல கிராமங்களில் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள புத்தமங்கலம், போதிமங்கலம் முதலான ஊர்களின் பெயர்களும்கூட இங்கே செழித்திருந்த பௌத்தத்துக்கு சாட்சியங்களாகவே உள்ளன.
அப்படி இங்கே செழித்திருந்த பௌத்தம், இந்த மண்ணிலிருந்து தானாக மறைந்து விடவில்லை. வன்முறையாலும், ஒடுக்குமுறைகளாலும்தான் பௌத்தம் அழிக்கப்பட்டது. ‘‘பௌத்தத்தின் கூட்டுணர்வும், அதனடிப்படையில் அது உருவாக்கிய சமூக ஒழுங்கும் துறவிகளின் பள்ளிகள் முதல் சதாரண மக்களின் வீடுகள் வரை சமத்துவத்தை நிலைநாட்டியது. இது வர்ண பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்த ஆரிய மதத்துக்கு எதிரானதாக இருந்தது. அதன் காரணமாகவே பௌத்த, சமண மரபுகளை அவர்கள் கடுமையாக ஒடுக்கினார்கள்’’ என வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் கூறுகிறார்.
பௌத்தம் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டது என்பதை நமது இலக்கியங்கள் பதிவு செய்து வைத்துள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப்பட்ட அரசவை இலக்கியங்கள் அனைத்தும் பௌத்த, சமண மரபுகளை கடுமையாகத் தாக்குவதைப் பார்க்கலாம். கல்ஹணர் எழுதிய ‘ராஜதரங்கிணி’ விசாகதத்தரின் ‘முத்ர ராட்ஷஸ்’ எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம். தமிழில் பக்தி இலக்கியங்கள் பலவும் பௌத்தத்தையும் சமணத்தையும் தூற்றுவதைப் பார்க்க முடியும். இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் யுவான் சுவாங், அப்போது காஷ்மீரில் பௌத்த துறவிகள் ஒடுக்கப்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மட்டும் காஷ்மீரிலும், பஞ்சாபிலும் 1600 பௌத்த ஸ்தூபிகள் உடைத்தெறியப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான பௌத்த துறவிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் அவர் எழுதியுள்ளார்.
‘‘திருஞானசம்பந்தர் பாண்டிய மன்னனை சமணத்தி லிருந்து சைவ மதத்துக்கு மாற்றி, அவன் மூலமாக எட்டாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றார். தமிழகத்தில் 15, 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்களில் (திருவிடைமருதூரில் உள்ள நாறும்பூ நாதர் சிவன் கோயில்) இந்த நிகழ்ச்சி பற்றி வரையப்பட்ட ஓவியங்கள் காணப் படுகின்றன’’ என்று ரொமிலா தாப்பர் கூறுகிறார்.
பௌத்த சமணக் கோயில்கள் பல இந்துமதக் கோயில் களாக மாற்றப்பட்ட வரலாறும் உண்டு. திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் வெட்டுவான்கோயில் என்ற இடத்திலுள்ள குடைவரைக்கோயில், ஏழாம் நூற்றாண்டில் சைவக் கோயிலாக மாற்றப்பட்டது.
அரசர்களின் ஆதரவை இழந்ததற்குப் பிறகு பௌத்த, சமண மடங்களும் ஆலயங்களும் தங்கள் செல்வாக்கை இழந்தன. புத்தர் சிறு தெய்வமாக்கப்பட்டார். ‘இன்று கிராமங்கள்தோறும் காணப்படுகிற அய்யனார் கோயில்கள், புத்தர் கோயில்களே’ என்பதை அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி எடுத்துக் காட்டியுள்ளார். தருமராசா என்ற பெயரும் புத்தரது பெயர்தான். ‘‘புத்தர் பெயர்களுள் ‘தருமன்’ அல்லது ‘தருமராசன்’ என்பதும் ஒன்று. பிங்கலம், திவாகரம் என்னும் நிகண்டுகளில் இப்பெயர்களைக் காணலாம்’’ என்று குறிப்பிடும் சீனி.வேங்கடசாமி, ‘தருமராசா கோயில்கள் என்பவை புத்தர் கோயில்களே, பாண்டவருள் மூத்தவரான தருமராசனுக்கும் அதற்கும் தொடர்பில்லை’ என்று விளக்கியுள்ளார்.
தமிழ் இலக்கியத்துக்கு பௌத்தம் ஆற்றியுள்ள பங்களிப்பு மிகவும் அதிகம். நமது ஐம்பெருங்காப்பியங்களும் பௌத்த, சமண மதத்தைச் சார்ந்தவை தான். உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளுக்கும் பௌத்த, சமணத்துக்குமான உறவு யாவரும் அறிந்ததே.
தமிழின் இலக்கியச் செல்வங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவை உள்ளிட்ட பதினென் கீழ்கணக்கு நூல்களில் பௌத்த நெறியே மேலாதிக்கம் செலுத்தியது என திரு.வி.க. குறிப்பிடுகிறார். ‘‘பத்துப்பாட்டு, எட்டுத்தொகை-பதிணெண் கீழ்கணக்குகளில் கொல்லாமை, கள்ளுண்ணாமை, ஊன்வேள்வி, ஊனமில் வேள்வி, பௌத்தப் பள்ளிகள் மற்றச் சமயக்கோயில்கள், பல கடவுளர் வழிபாடுகள் முதலியன சொல்லப் பட்டிருக்கின்றன’’ என்று திரு.வி.க. எடுத்துக் காட்டுகிறார். பௌத்தக் கருத்துகள் இன்றும் நம்மிடம் கலந்திருப்பது போலவே, பௌத்தர்கள் நமது கருத்துக்களை எடுத்துரைப்பதற்குப் பயன்படுத்திய பாலி மொழிச் சொற்கள் பலவும் தமிழில் இப்போதும் கலந்துள்ளன. பள்ளி, புத்தகம், கருணை, துக்கம் முதலிய சொற்கள் இதற்கு உதாரணம்.
திராவிட இயக்கத்தவர் தமது பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்ப புத்தரைத் துணைக்கு அழைத்துக் கொண்டனர். பௌத்தத் துறவிகளை அழைத்துப் பௌத்த மாநாடுகளை நடத்திய பெரியார் ஈ.வே.ரா., தான் சொல்கிற கருத்துகளைதான் புத்தரும் கூறியிருக்கிறார் என்று பேசியுள்ளார்.
பௌத்தத்தால் தமிழ் வளம் பெற்றது மட்டுமல்ல தமிழ்நாடு பௌத்தத்துக்கு செய்துள்ள பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும். நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு இணையான ஒரு பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் இருந்துள்ளது. நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக விளங்கிய திங்கநாகர் என்பவர் காஞ்சிபுரத்தில் பிறந்த தமிழராவார். அவரது மாணவராக இருந்து பின்னர் அதே பல்கலைக்கழகத்தின் தலைவரான தருமபாலரும் தமிழர்தான்.
இன்று உலகெங்கும் பின்பற்றப் படுகிற சென் பௌத்தம் (Zen Buddhism) தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தோன்றியதுதான். சீனாவிலும் ஜப்பானிலும் புகழ்பெற்று விளங்கும் இந்த சென் பௌத்தத்தை கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அந்த நாடுகளுக்குக் கொண்டுசென்று பரப்பியவர், போதி தருமர் என்ற தமிழராவார்! அவரது தந்தை காஞ்சிபுரத்தின் அரசராயிருந்தார். ‘சீனாவில் இந்த மதத்தை மேலும் வளர்த்தவர், வச்சிரபோதி என்ற தமிழ் பௌத்தரே’ என தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் கூறியுள்ளார்.
இன்று புத்தரின் பரிநிர்வாண நாளை கொண்டாடும் தமிழக அரசு தமிழுக்கும், பௌத்தத்துக்குமான உறவை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள். இது சமயம் சார்ந்த கோரிக்கை அல்ல. தமிழ்நாடு முழுவதும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் புத்தர் சிலைகளைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் முதல் கடமையாகும்.
தஞ்சை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களிலுள்ள புத்தர் சிலைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நானும், ஆனந்த் என்ற நண்பருமாகச் சேர்ந்து பார்வையிட்டோம். இந்தியத் தொல்பொருள் துறையினால் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிற சில சிலைகள்கூட மோசமான முறையில் புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தோம். ஆயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட அரிய சிலைகளை சாலை ஓரங்களில் போட்டு வைத்திருக்கிறார்கள். பெருஞ்சேரி என்ற இடத்தில் ஒரு புத்தர் கோயில் பாழடைந்து கிடக்கிறது. ஒரு புத்தர் சிலை, பள்ளியன்றின் முன்புறம் மாணவர்கள் விளையாடும் இடத்தில் போட்டு வைக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டத்தில் ஒரு சிலை சாலையோரம் கிடக்கிறது. தலைவாசலுக்கருகில் உள்ள தியாகனூரில் இரண்டு அற்புதமான புத்தர் சிலைகள் வயலில் வேப்பமரத்தின் கீழ் புதரில் கிடக்கின்றன. இப்படி ஏராளமாகச் சொல்லலாம்.
உலகிலேயே அதிகமான சிலைகள் இருப்பது புத்தருக்குத்தான். அவற்றுள் மிக அழகான சிலைகள் தமிழ்நாட்டில் வடிக்கப்பட்டவைதான். ‘நாகப்பட்டினம் புத்தர்’ என்று ஒரு கலைமரபே இருக்கிறது. அந்த அளவுக்கு அழகான சிலைகள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. கவனிப்பின்றி போடப்பட்டிருப்பதால் பல அரிய சிலைகள் களவாடப்பட்டு இன்று அயல்நாடுகளில் பெரிய பணக்காரர்களின் சேகரிப்பில் காட்சியளிக்கின்றன.
புத்தர் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அவற்றைப் பெயர்த்துக் கொண்டுபோய் மியூசியங்களில் அடுக்குவதென்று அர்த்தமாகாது. இப்போது சிலைகள் காணப்படும் ஊர்களிலேயே அவற்றைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஊர்கள் கொண்ட வரைபடம் ஒன்றைத் (Map) தயாரித்து அவற்றை சுற்றிப்பார்க்க வசதிசெய்து தந்தால், உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும் பயணிகள் வருவது நிச்சயம். அது நமக்கு அந்நியச் செலாவணியையும் ஈட்டித்தரும்.
புத்தரது 2500-வது பரிநிர்வாண நாள் 1956-ல் கொண்டாடப்பட்டது. அப்போது நேரு பிரதமராயிருந்தார். உலகத்தின் கவனத்தை ஈர்க்கின்ற விதத்தில் அந்தக் கொண்டாட்டம் இருந்தது. அப்படி ஒர் ஆர்வம் இன்று மத்திய அரசிடம் தென்படவில்லை. அண்ணல் அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவ முடிவெடுத்திருந்த நேரம் அது. அதனால் பௌத்தமும் இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என்று ஆக்குவதற்கு அந்தக் கொண்டாட்டங்களை ஆட்சியாளர்கள் அப்போது பயன்படுத்திக்கொண்டனர். அந்த மாதிரியான நெருக்கடி எதுவும் இப்போது இல்லை. எனவே, இன்று அடக்கிவாசிக்கிறார்கள் போலும். ஆனால், முன்பு எப்போதையும்விட இன்றுதான் பௌத்த நெறிகளின் முக்கியத்துவம் கூடியிருக்கிறது. பௌத்தத்தை ஒரு மதமாகக் குறுக்கிவிடாமல் அதன் சாரத்தை ஒவ்வொருவரும் ஏற்பது அவசியம். ‘‘அறிவியல் சிந்தனையால் விழிப்படைந்த ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே நெறி பௌத்த நெறிதான்’’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டார்.
‘‘புத்தமதம் அல்லது புத்தக்கொள்கை என்று சொன்னால், அது புத்தருக்கு மட்டுமே உரிமையான கொள்கையன்று. அது அறிவுக்கு உரிமையான கொள்கை. அறிவுதான் ஆசான் என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார் புத்தர்’’ என்று குறிப்பிட்டார் பெரியார். இந்த மாபெரும் தலைவர்களின் வழிநடக்கும் தமிழக அரசு, இந்தத் தருணத்தைப் பயன்படுத்தித் தமிழுக்கும் பௌத்தத்துக்குமான உறவைப் புதுப்பிக்க முன்வர வேண்டும். வள்ளுவரைப்போல புத்தர் மீதும் பற்றுகொண்ட நமது முதல்வர் நிச்சயம் இதைச் செய்வாரென நம்புவோம்.
- ரவிக்குமார் எம்.எல்.ஏ
ஜூனியர் விகடன் 07-02-07
No comments:
Post a Comment