Sunday, August 29, 2010

Keanu reeves acts as buddha




Movie: Little Buddha
Cast : Keanu reeves

History of King Ashoka and His patronage on buddhism

You may go to : http://en.wikipedia.org/wiki/Ashoka

What is Enlightenment - Zen Biology

Enlightenment Documentary, Pt 2

Enlightenment Documentary, Pt 1

Thich Nhat Hanh- Mindful Movements

What is englightenment

Ram doss interview Thicht Nhat Hanh

Sunday, August 15, 2010

மணிமேகலை (காப்பியம்)

சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காபியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒருப் புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் தனதுத் தோழியும் பூப்பரிக்கச் சென்றிருந்தப்போது, உதயகுமரன் என்றச் சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதலில் விழுந்தான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிப்பள்ளவம் என்றத் தீவில் கொண்டேவிட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒருப் புத்தப் பீடத்தில் அமர்ந்துத் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன்பிறகுக் கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மனிப்பள்ளவத்திற்கு அழைத்து வரப்பட்டால் என்பதைக் கூறி, முன்று அதிசிய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவை புகாரிலுள்ள எழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி கயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையானக் கயசண்டிகையின் கணவன் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் உடயகுமரனைக் கொலைச் செய்துவிட்டான். இதற்காகக் கயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைதுச் செய்யப்படுகிறாள் ஆனால் தனதுத் தாயாரின் உதவியில் விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்றுத் தந்து ஞானப்பிதாவானக் கண்ணகியிடம் உரையாடி அறிவுரைப் பெற்றாள். அத்திடன் அனைத்து மதங்களின் நிறைக்குறைகளை வல்லுனர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்றுத் தனது ஆசானான அரவன அடிகளிடம் குறிப்புகள் பெற்று ஒரு முழுமையானப் புத்தத் துரவியாகித் தவத்தில் ஆழ்ந்தாள்.

தடித்த எழுத்துக்கள்==கதாப்பாத்திரங்கள== மணிமேகலை - கோவலன் மாதவி தம்பதியின் மகள். இரத்தத்திலேயே ஊறிய துணிச்சல், பண்புகள் அதிகம் பெற்றவள். துறவியாகவேண்டும் என்று கூறிய புத்த மதப் பிக்குணி, ஒரு புறமும், தன்னை மோகத்தினால் பின்தொடர்ந்த சோழ மன்னன் மறுபுறமும் இருந்தும், மணிமேகலை அனைத்துத் தடைகற்களையும் துணிச்சலுடன் உடைத்தெறிந்தாள். பிறகு தன் விருப்பமான புத்தத் துறவியாகி மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். கோவலன் இரத்தத்தில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்த வீரம் மணிமேகலையிடம் இருந்ததால்தான் இது சாத்தியமானது. மாதவியைப் போல் மணிமேகலையிடம் அளவற்ற பண்புகள் இருந்தமையால்தான், தனது தாயார், ஆசான் மற்றும் ஞானபிதாவின் பேச்சை மதித்து நடக்கிறாள். இக்காப்பியமே மணிமேகலை பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதை மூலமாகக் கொண்டு அமைந்துள்ளது.

உதயகுமரன் - சோழ மன்னன், மனிமேகலையின் மீது முட்டாள் தனமான மோகம் கொண்டவன். நினைத்ததை அடையவேண்டும் என்ற குணம் படைத்தவன். ஆசை இருக்கலாம் ஆனால் வெறித்தனமான ஆசை இருந்தால் அழிவு நிச்சயம் என்பதை உதயகுமரன் கதாப்பாத்திரம் காட்டியுள்ளது. மணிமேகலையின் மேல் காதல்கொண்ட உதயகுமரன் அவளது துறவியாகவேண்டும் என்ற ஆசையை அறிந்தும் கூட அவளைப் பின்தொடர்ந்தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால், கஞ்சணன் என்பவன் உதயகுமாரனைக் கொலை செய்துவிட்டான்.

சுதமதி - மணிமேகலையின் நம்பகமான தோழி. மணிமேகலையை மணிப்பள்ளவத்தில் விட்டு, அவளை ஆன்மீகப் பாதையில் செலுத்தியதை மேகலையின் தாயாரிடம் கூடக் கூறாமல், சுதமதியின் கனவிலேயே முதலில் தோன்றி நடந்ததை கூறினாள், கடலின் கடவுள் மணிமேகலா. இது சுதமதியின் மேல் மணிமேகலா வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. இக்காப்பியத்திலேயே மணிமேகலையின் ஒரே தோழி சுதமதிதான். அக்காலக்கட்டங்களில் நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் சுதமதி. அவளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை பல உண்டு.

அசோகர் (கி.மு. 300-கி.மு.232)

இந்திய வரலாற்றில் மிகப் பெரும் புகழ் வாய்ந்த அரசராக விளங்கியவர் அசோகர். இவர்
மௌரிய மன்னர் மரபில் மூன்றாவது அரசர். மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த
மௌரியரின் பேரன். சந்திரகுப்தர் இந்திய இராணுவத் தலைவராக விளங்கினார். அவா மகா
அலெக்சாந்தரின் இந்தியப் படை எடுப்பிற்குப் பிறகு, வட இநதியாவின் பெரும்
பகுதியை வென்று அதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே ஒரு பெரும் பேரரசை முதன்
முதலில் நிறுவினார்.

அசோகர் பிறந்த ஆண்டு தெரியவில்லை. பெரும்பாலும் கி.மு.300 ஆண்டு வாக்கில் அவர்
பிறந்திருக்கலாம். கி.மு.273 ஆம் ஆண்டில் அசோகர் அரியணை ஏறினார். முதலில் தன்
பாட்டனாரின் அடியொற்றி தம் ஆட்சி எல்லைகளை இராணுவ நடவடிக்கை மூலம் விரிவுபடுத்த
விழைந்தார். அவரது ஆட்சியின் எட்டாம் ஆண்டில் இந்தியாவின் கிழக்குக்
கடற்கரையில் அமைந்திருந்த கலிங்க நாட்டின் (இன்றைய ஒரிசா மாநிலம்) மீது போர்
தொடுத்து வெற்றி கண்டார். ஆனால் தமது வெற்றியின் பின்னணியில் மக்களுக்கு
இழைக்கப்பட்ட கொடுமைகளை எண்ணித் தாங்கொணாணுத் துயருற்றார். கலிங்கப் போரில் ஒரு
இலட்சம் பேர் இறந்தனர். அதற்கும் அதிகமானோர் காயமுற்றனர். இதனால்,
அதிர்ச்சியும் கடுங்கழுவிரக்கமும் கொண்ட அசோகர் இந்தியா முழுவதையும் வெற்றி
கொள்ள வேண்டும் என்ற தம் எண்ணத்தைக் கைவிட்டார். மாறாக, எல்லா வகை
ஆக்கிரமிப்பிப் போர்களையும் அறவே ஒழித்துவிட உறுதிபூண்டார். அவர் புத்த
சமயத்தைத் தமது சமயக் கொள்கையாக ஏற்றுக் கொண்டார். வாய்மை. கருணை. அகிம்சை ஆகிய
அறநெறிகளைத் தம் வாழ்வில் கடைப்பிடிக்க முயன்றார்.

அசோகர் தம் சொந்த வாழ்க்கையில் வேட்டையாடுவதைக் கைவிட்டார். புலால் உண்ணாமையைப்
பின்பற்றினார். பல்வேறு மனிதாபிமான அரசியல் கொள்கைகளை அவர் செயற்படுத்தியது மிக
முக்கியமானதாகும். அவர் மருத்துவமனைகளையும், விலங்குகளுக்குப் புகலிடங்களையும்
நிறுவினார்; கொடுமையான சட்டங்களைச் சீர்படுத்தினார்; சாலைகளை அமைத்தார்;
நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கினார்; மக்களிடையே பக்தியுணர்வை வளர்க்கவும்,
நட்புறவை ஊக்குவிக்கவும், "தருமாதிகாரிகள்" என்ற சிறப்பு அரசு அலுவலர்களை
நியமித்தார். அவரது ஆட்சியில் எல்லாச் சமயங்களும் மதிக்கப்பட்டன. ஆனால் அசோகர்
குறிப்பாகப் புத்த சமயத்துக்கு ஊக்கமளித்தார். அதனால் புத்த சமயம் மக்ளிடைய
அதிகமாகச் செல்வாக்கு பெற்றது. புத்த சமயப் பிரச்சாரகர்களைப் பல
அயல்நாடுகளுக்கு அனுப்பினார். அவற்றுள் முக்கியமாக இலங்கை சென்ற குழு
பெருமளவில் வெற்றிகரமாகப் பணிபுரிந்தது.

அசோகர் தமது நீண்ட ஆட்சிக் காலத்தின்போது, தமது வாழ்க்கை நிகழ்ச்சிகளையும்,
கொள்கைகளையும பாறைகளிலும், துர்பிகளிலும் பொறிக்கும்படி செய்தார். இந்த
நினைவுச் சின்னங்களில் பல இன்றும் நிலைத்திருக்கின்றன. இந்தச் சின்னங்கள்
விரிவான நிலப்பபகுதிகளில் காணப்படுவதால் அவை அசோகப் பேரரசின் ஆட்சிப் பரப்பின்
அளவை அறிவதற்கு ஆதாரங்களாக விளங்குகின்றன. இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள
வாசகங்கள், அவரது கொள்கைகளை அறிவதற்கு முக்கிய் அகச் சான்றுகளாகும். இந்தத்
துர்பிகள் அவர் காலத்திய சிறந்த கலை வேலைப்பாடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகவும்
விளங்குகின்றன.

அசோகரின் இறப்பிற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குள் மௌரியப் பேரரசு சிதறுற்றது.
அதன் பின்பு அது எழுச்சி பெறவே இல்லை. ஆனாலும், அசோகர் புத்த சமயத்திற்கு
ஆதரவளித்ததன் மூலம் உலகத்தின் மீது அவர் பெற்ற நீண்ட காலச் செல்வாக்கு மிகப்
பெரியதாகும். அவர் ஆட்சி பீடம் ஏறியபோது புத்தச் சமய்ம் வட இந்தியாவில் ஒரு
குறுகிய வட்டாரத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. அவா இறக்கும்போது இந்தியா
முழுவதும் அது பரவியிருந்ததோடு இந்தியாவின் அண்டை நாடுகளிலும் மிக விரைவாகப்
பரவி வந்தது. கௌதம புத்தர் நீங்கலாக புத்த சமயம் ஓர் உலகப் பெரும் சமயமாக
வளர்வதற்கு வேறெவரையும் விட முக்கிய காரணமாக இருந்தவர் அசோகரேயாவார்.

--
--உதயன்--

தமிழகத்தில் பௌத்த மத எழுச்சியும் வீழ்ச்சியும்

தமிழகத்தில் குடிபுகுந்த சமயங்களுள் பௌத்த சமயம் குறிப்பிடத்தக்கதாகும். சங்க இலக்கியப் பாடல்களில் பௌத்தம், புத்தர் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. மன்னர்கள், செல்வந்தர்களின் (வணிகர்கள்) ஆதரவு பௌத்த சமயத்தைத் தமிழகத்தில் வேரூன்றச் செய்ததாகக் குறிப்பிடலாம். பௌத்த சமயத்தின் மனிதநேயக் கோட்பாடுகள், அறக் கருத்துகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றன. வைதிக இந்து சமயம், பௌத்த சமயக் கோட்பாடுகள் சிலவற்றை உள்வாங்கிக் கொண்டாலும், பௌத்தம் தனக்கே உரிய சிறப்புப் பண்புகளையும், மனிதநேயத் தத்துவங்களையும் உலக மக்களுக்கு அளித்த பெருமைக்குரியதாக விளங்குகிறது.

வட இந்தியாவில் கௌதமபுத்தர் வாழ்ந்த காலம் கி.மு. 567-487 ஆகும். வைதிக சமய வேள்விச் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து பௌத்தமதம் தோன்றினாலும் எளிமையான சமயக் கோட்பாடுகளைக் கொண்டிருந்ததால் வேகமாகப் பரவத் தொடங்கியது எனலாம். கௌதமபுத்தரை, சமணத் தீர்த்தங்கரர்களுள் இறுதியானவராக "வர்த்தமான மகாவீரன் ஒன்று விட்ட சகோதரர்' என்று சமண இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. புத்தர் உபதேசித்த தர்மம், ஏற்படுத்திய சங்கம் மற்றும் புத்தர் ஆகிய மூன்றும் பௌத்த மும்மணிகள் என்று கூறப்பட்டன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, தமிழகத்தில் பௌத்தத் துறவிகள் வாழ்ந்தனர். இளம் போதியார் முதலியவர்கள் சங்க காலத்தில் வாழ்ந்த பௌத்த சமயப் புலவர்கள் ஆவர். பௌத்தமானது ஏறத்தாழ அசோகன் காலத்தில் தென்னாட்டில் புகுந்தது என்பதை அசோகரது சிறிய பாறைக் கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன.

அசோகர் தம் ஆட்சிக் காலத்தில், தம் மகளான சங்கமித்திரையை (கி.மு. 272-232) புத்தமதப் பிரச்சாரம் செய்ய, தென்னாட்டிற்கும் இலங்கைக்கும் அனுப்பினார். பொதிய மலைப் பகுதியில் ‘சங்கமித்திரை மேடு' என்ற ஒரு பகுதி இருப்பதால் சங்கமித்திரை பாண்டிய நாட்டிலும் பௌத்தமதப் பிரசாரம் செய்தார் என்று அறிய முடிகிறது. கலிங்கப்போர் முடிந்த பின் அசோகன் காலத்தில் அசோகனின் தூதுவர்கள் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கொற்கையிலும், பிற இடங்களிலும் பரவி பௌத்த சமயத்தை வளர்த்தனர் எனத் தெரிய வருகிறது.

இலங்கையில் பௌத்தம்

முதலில் தென்னாட்டிற்கும் பிறகு தென்னாட்டிலிருந்து பிற கீழை நாடுகளுக்கும் பௌத்த சமயம் பரவத் தொடங்கியது. பௌத்தம் இலங்கைக்குப் பரவிய விதம் குறித்துப் பல்வேறு முரண்பாடான கருத்துகள் நிலவுகின்றன. இலங்கையின் பௌத்த நூலான மகாவம்சம், பௌத்த சமய பிரசாரத்திற்காக சென்ற மகேந்திரனும், சங்கமித்திரையும் வான்வழியாக இலங்கையை அடைந்ததாகக் கூறுகிறது. இக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படா விட்டாலும் ஆதம் பாலத்தின் வழியாக அசோகனது மக்கள் இலங்கைக்குச் சென்றிருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் பௌத்த சமயச் செல்வாக்கு

புத்தருக்கென அமைக்கப்பட்ட கோயில்கள் சேதியம் (சைத்யம்) எனப்பட்டது. ஆண் துறவிகள் ‘பிட்சுகள்' என்றும், பெண் துறவிகள் ‘பிட்சுணிகள்' என்றும் அழைக்கப்பட்டனர். காஞ்சி மாநகர் பௌத்தர்களின் மையமாக விளங்கியது. ஸ்ரீவிஜய மன்னன் விஜயோத்துங்க வர்மன் தன் தந்தையாரின் பெயரில் ‘சூடாமணிவர்ம விகாரம்' என்ற பௌத்தக் கோயிலைக் கட்டினான். இதற்கு ஆனைமங்கலம் என்ற கிராமம் பள்ளிச்சந்தமாக விடப்பட்டது. முதலாம் இராஜராஜன், இப்பௌத்த கோயிலுக்கு ஆதரவளித்தான். புத்தமங்கலம், தஞ்சையில் இருந்த விரங்குதாச, வேணுதாச மடங்கள் பௌத்த சமய மையங்களாகத் திகழ்ந்தன.

அகழாய்வு ஆதாரங்கள்

நாகப்பட்டினத்தில் நிகழ்த்தப் பெற்ற அகழாய்வுகளில் மட்டும் முந்நூற்றுக்கும் அதிகமான வெள்ளியிலான புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிலைகள் அனைத்தும் முற்காலச் சோழர்கள் காலத்திலிருந்து விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. இவ்வகழ்வாய்வின் வாயிலாக பௌத்த சமயம் தமிழக செல்வாக்குப் பெற்றிருந்ததை உணர முடிகிறது. பௌத்தத் துறவிகளின் சிலைகள் காவிரிப்பூம்பட்டினத்திலும் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளன. 1964-65இல் பல்லவனேசுவரத்தில் நிகழ்த்தப்பெற்ற அகழாய்வில் புத்தவிகாரை கண்டறியப்பட்டது. அதில் மொத்தம் ‘ஐந்து' சதுர அறைகள் காணப்படுகின்றன. இங்கு ‘புத்தன் சுடுமண் உருவம்' இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்விகாரை கி.பி. 4-5ஆம் நூற்றாண்டினது என்று நடன. காசிநாதன் என்பவரால் நிறுவப்பட்டுள்ளது.

பக்தி இயக்கமும் பௌத்த சமயமும்

தமிழகத்தில் பக்தி இயக்கமானது கி.பி. 6ஆம் நூற்றாண்டளவில் தொடங்கியது. வைதிக சமயங்களுக்கு சமணம், பௌத்தம் போன்ற புறச்சமயங்கள் வெறுப்பைத் தந்தன. அரசர் செல்வாக்குப் பெற்ற சமயம் ஏனைய சமயங்களை ஏளனம் செய்யத் தலைப்பட்டது. சைவ சமயத்தவர்கள் மேற்கொண்ட அனல்வாதம் - புனல்வாதம் போன்றவை பௌத்த சமயத்தைப் புறந்தள்ளின. நாயன்மார்களும், ஆழ்வார்களும் இனிய தமிழில் பாடல்களைப் பாடி இறையுணர்வுடன் பக்தி உணர்வையும் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் ஊட்டினர். மன்னர்களின் ஆதரவின்மை, வைதிக சமயங்களின் புத்துயிர்ப்பு, பௌத்த சமயங்களில் இருந்த புரிந்துகொள்ள இயலாத தத்துவக் கோட்பாடுகள் போன்றவை பௌத்த சமயம் வலுக்குன்றக் காரணங்களாக அமைந்தன. மேலும் கி.பி. 8-9ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட குகையிடிக் கலகத்தின் வாயிலாக பௌத்த குகைகள் பெரும்பாலானவை வைதிகச் சமயங்களுக்கு உயதாக்கப் பட்டன.

அசோகனுக்குப் பின்பு வடஇந்தியாவிலும், பக்தி இயக்கத் தின் விளைவாக தென்னிந்தியா விலும் பௌத்த சமயம் வீழ்ச்சியுறத் தொடங்கியதை சீனப் பயணி யுவான் சுவாங்கின் (கி.பி. 630) குறிப்புகள் உணர்த்தும். யுவான் சுவாங், பௌத்த சமயத்தின் சுவடுகள் இந்திய மண்ணிலிருந்து மறைந்து கொண்டிருப்பதைக் கண்டதோடு, அந்த அடையாளங்கள் முற்றிலும் அழியும்போது பௌத்த சமயம் முற்றிலும் அழிந்து மறைந்து விடும் என்று தன்னிடம் ஆரூடம் கூறப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

பக்தி இயக்க காலகட்டத்திற்குப் பின்னர், பௌத்த சமய விகாரைகள், மட்டுமல்லாது பௌத்த பௌத்த சமயக் கோட்பாடுகள் போன்ற வற்றையும் வைதிக சமயங்கள் பெற்றுக்கொண்டன. பௌத்த சமயம் தமிழகம் முழுவதும் பரவியிருந்த காலத்தில் புத்தருக்குப் பல சிற்றூர்களில் கோயில்கள் கட்டப்பட்டன. புத்தருக்குய பெயர்களுள் "தருமராஜர்' என்ற பெயரும் ஒன்று. பௌத்த சமயம் வீழ்ச்சியுற்ற பின்னர் தர்மராஜர் கோயில்கள் பாண்டவருள் மூத்தவ ரான, தர்மராஜன் கோயில்களாக மாற்றப்பட்டதாக மா. இராச மாணிக்கனார் கருதுவார்.

‘விநாயகன்' என்ற பெயர் புத்தருக்கும் உரியதாகும். புத்தர் பிறக்கும்போது அழகிய வெள்ளை யானையின் உருவத்தில் இருந்தார் என்று புத்த ஜாதகக் கதைகள் கூறும். விநாயகர் அறிவும், செல்வமும் தரும் தெய்வம் என்று பௌத்தர்கள் கருதினர். விநாயகன் என்ற பெயருடன் இருந்த புத்தரது கோயில்கள் ‘பிள்ளையார்' கோயில்களாக மாற்றப்பட்டதாக மயிலை. சீனிவேங்கடசாமி குறிப்பிடுவார். புத்தர் திருமாலின் அவதாரமாக்கப்பட்டார். புத்தரது வழிபாடு, விநாயகர் வழிபாடாக வைதிக சமயத்தில் புகுத்தப்பட்டது. இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது பௌத்த சமயம் அதன் கோட்பாடுகளும் அழியவில்லை என்பதும், வைதிக சமயத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது என்பதும் மறுக்க இயலாத உண்மை.

இல. கணபதிமுருகன்
நன்றி: தினமணி

தமிழகத்தில் பௌத்தம் மறையவில்லை... அழிக்கப்பட்டது!

கௌதம புத்தர் மகா பரிநிர்வாணமடைந்த 2550-ம் ஆண்டை மத்திய, மாநில அரசுகள் இப்போது கொண்டாடுகின்றன. இதற்காக இந்திய அரசு பத்து கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. பௌத்தம் குறித்த மாநாடு ஒன்றை நடத்துவது, அதற்கு உலகமெங்குமிருந்து அறிஞர்களை அழைப்பது, நாளந்தாவில் உள்ள பௌத்த மடாலயத்தைப் புதுப்பிப்பது எனப் பல்வேறு திட்டங்களை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அம்பிகா சோனி அறிவித்திருக்கிறார். பீகார், உத்தரப்பிரதேசம் முதலான மாநில அரசுகளும் இந்த ஆண்டை மிக விமரிசையாகக் கொண்டாடி வருகின்றன. மற்ற இடங்களில் கடந்த மே மாதத்திலேயே இந்தக் கொண்டாட்டங்கள் துவங்கி விட்டாலும், தமிழ்நாட்டில் இப்போதுதான் நமது மாநில அரசு விழா ஒன்றை நடத்தியுள்ளது.

பௌத்தத்தை வடஇந்திய மதம் என்று பலர் சொல்வதுண்டு. ஆனால், அது உண்மையல்ல... பௌத்தத்துக்கும் தமிழுக்குமான உறவு மிகவும் தொன்மையானது. இந்தியாவின் பிற மாநிலங்களில் பௌத்தம் அழிந்து போனதற்குப் பிறகும்கூட தமிழ்நாட்டில் அது தழைத்துச் செழித்திருந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கண்டெடுக்கப்பட்ட செம்பு மற்றும் கல்லால் ஆன புத்தர் சிலைகளை ஆராய்ந்த கலை வரலாற்று அறிஞர் வித்யா தெஹேஜியா என்பவர், ‘‘இதுவரை நம்பப்பட்டு வந்ததைவிடவும், நீண்ட காலத்துக்கு மிகுந்த பிடிப்போடு பௌத்தம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. அது 15 மற்றும் 16-ம் நூற்றாண்டுகள் வரை தமிழ்நாட்டில் உயிர்த்துடிப்போடு இருந்திருக்கிறது’’ எனக் குறிப்பிடுகிறார். இன்றைக்கும்கூட தமிழ்நாட்டின் பல கிராமங்களில் புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள புத்தமங்கலம், போதிமங்கலம் முதலான ஊர்களின் பெயர்களும்கூட இங்கே செழித்திருந்த பௌத்தத்துக்கு சாட்சியங்களாகவே உள்ளன.

அப்படி இங்கே செழித்திருந்த பௌத்தம், இந்த மண்ணிலிருந்து தானாக மறைந்து விடவில்லை. வன்முறையாலும், ஒடுக்குமுறைகளாலும்தான் பௌத்தம் அழிக்கப்பட்டது. ‘‘பௌத்தத்தின் கூட்டுணர்வும், அதனடிப்படையில் அது உருவாக்கிய சமூக ஒழுங்கும் துறவிகளின் பள்ளிகள் முதல் சதாரண மக்களின் வீடுகள் வரை சமத்துவத்தை நிலைநாட்டியது. இது வர்ண பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்த ஆரிய மதத்துக்கு எதிரானதாக இருந்தது. அதன் காரணமாகவே பௌத்த, சமண மரபுகளை அவர்கள் கடுமையாக ஒடுக்கினார்கள்’’ என வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் கூறுகிறார்.

பௌத்தம் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டது என்பதை நமது இலக்கியங்கள் பதிவு செய்து வைத்துள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப்பட்ட அரசவை இலக்கியங்கள் அனைத்தும் பௌத்த, சமண மரபுகளை கடுமையாகத் தாக்குவதைப் பார்க்கலாம். கல்ஹணர் எழுதிய ‘ராஜதரங்கிணி’ விசாகதத்தரின் ‘முத்ர ராட்ஷஸ்’ எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம். தமிழில் பக்தி இலக்கியங்கள் பலவும் பௌத்தத்தையும் சமணத்தையும் தூற்றுவதைப் பார்க்க முடியும். இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் யுவான் சுவாங், அப்போது காஷ்மீரில் பௌத்த துறவிகள் ஒடுக்கப்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மட்டும் காஷ்மீரிலும், பஞ்சாபிலும் 1600 பௌத்த ஸ்தூபிகள் உடைத்தெறியப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான பௌத்த துறவிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் அவர் எழுதியுள்ளார்.

‘‘திருஞானசம்பந்தர் பாண்டிய மன்னனை சமணத்தி லிருந்து சைவ மதத்துக்கு மாற்றி, அவன் மூலமாக எட்டாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றார். தமிழகத்தில் 15, 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்களில் (திருவிடைமருதூரில் உள்ள நாறும்பூ நாதர் சிவன் கோயில்) இந்த நிகழ்ச்சி பற்றி வரையப்பட்ட ஓவியங்கள் காணப் படுகின்றன’’ என்று ரொமிலா தாப்பர் கூறுகிறார்.

பௌத்த சமணக் கோயில்கள் பல இந்துமதக் கோயில் களாக மாற்றப்பட்ட வரலாறும் உண்டு. திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் வெட்டுவான்கோயில் என்ற இடத்திலுள்ள குடைவரைக்கோயில், ஏழாம் நூற்றாண்டில் சைவக் கோயிலாக மாற்றப்பட்டது.

அரசர்களின் ஆதரவை இழந்ததற்குப் பிறகு பௌத்த, சமண மடங்களும் ஆலயங்களும் தங்கள் செல்வாக்கை இழந்தன. புத்தர் சிறு தெய்வமாக்கப்பட்டார். ‘இன்று கிராமங்கள்தோறும் காணப்படுகிற அய்யனார் கோயில்கள், புத்தர் கோயில்களே’ என்பதை அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி எடுத்துக் காட்டியுள்ளார். தருமராசா என்ற பெயரும் புத்தரது பெயர்தான். ‘‘புத்தர் பெயர்களுள் ‘தருமன்’ அல்லது ‘தருமராசன்’ என்பதும் ஒன்று. பிங்கலம், திவாகரம் என்னும் நிகண்டுகளில் இப்பெயர்களைக் காணலாம்’’ என்று குறிப்பிடும் சீனி.வேங்கடசாமி, ‘தருமராசா கோயில்கள் என்பவை புத்தர் கோயில்களே, பாண்டவருள் மூத்தவரான தருமராசனுக்கும் அதற்கும் தொடர்பில்லை’ என்று விளக்கியுள்ளார்.

தமிழ் இலக்கியத்துக்கு பௌத்தம் ஆற்றியுள்ள பங்களிப்பு மிகவும் அதிகம். நமது ஐம்பெருங்காப்பியங்களும் பௌத்த, சமண மதத்தைச் சார்ந்தவை தான். உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளுக்கும் பௌத்த, சமணத்துக்குமான உறவு யாவரும் அறிந்ததே.

தமிழின் இலக்கியச் செல்வங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகியவை உள்ளிட்ட பதினென் கீழ்கணக்கு நூல்களில் பௌத்த நெறியே மேலாதிக்கம் செலுத்தியது என திரு.வி.க. குறிப்பிடுகிறார். ‘‘பத்துப்பாட்டு, எட்டுத்தொகை-பதிணெண் கீழ்கணக்குகளில் கொல்லாமை, கள்ளுண்ணாமை, ஊன்வேள்வி, ஊனமில் வேள்வி, பௌத்தப் பள்ளிகள் மற்றச் சமயக்கோயில்கள், பல கடவுளர் வழிபாடுகள் முதலியன சொல்லப் பட்டிருக்கின்றன’’ என்று திரு.வி.க. எடுத்துக் காட்டுகிறார். பௌத்தக் கருத்துகள் இன்றும் நம்மிடம் கலந்திருப்பது போலவே, பௌத்தர்கள் நமது கருத்துக்களை எடுத்துரைப்பதற்குப் பயன்படுத்திய பாலி மொழிச் சொற்கள் பலவும் தமிழில் இப்போதும் கலந்துள்ளன. பள்ளி, புத்தகம், கருணை, துக்கம் முதலிய சொற்கள் இதற்கு உதாரணம்.

திராவிட இயக்கத்தவர் தமது பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்ப புத்தரைத் துணைக்கு அழைத்துக் கொண்டனர். பௌத்தத் துறவிகளை அழைத்துப் பௌத்த மாநாடுகளை நடத்திய பெரியார் ஈ.வே.ரா., தான் சொல்கிற கருத்துகளைதான் புத்தரும் கூறியிருக்கிறார் என்று பேசியுள்ளார்.
பௌத்தத்தால் தமிழ் வளம் பெற்றது மட்டுமல்ல தமிழ்நாடு பௌத்தத்துக்கு செய்துள்ள பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும். நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு இணையான ஒரு பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் இருந்துள்ளது. நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக விளங்கிய திங்கநாகர் என்பவர் காஞ்சிபுரத்தில் பிறந்த தமிழராவார். அவரது மாணவராக இருந்து பின்னர் அதே பல்கலைக்கழகத்தின் தலைவரான தருமபாலரும் தமிழர்தான்.

இன்று உலகெங்கும் பின்பற்றப் படுகிற சென் பௌத்தம் (Zen Buddhism) தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தோன்றியதுதான். சீனாவிலும் ஜப்பானிலும் புகழ்பெற்று விளங்கும் இந்த சென் பௌத்தத்தை கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அந்த நாடுகளுக்குக் கொண்டுசென்று பரப்பியவர், போதி தருமர் என்ற தமிழராவார்! அவரது தந்தை காஞ்சிபுரத்தின் அரசராயிருந்தார். ‘சீனாவில் இந்த மதத்தை மேலும் வளர்த்தவர், வச்சிரபோதி என்ற தமிழ் பௌத்தரே’ என தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் கூறியுள்ளார்.

இன்று புத்தரின் பரிநிர்வாண நாளை கொண்டாடும் தமிழக அரசு தமிழுக்கும், பௌத்தத்துக்குமான உறவை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள். இது சமயம் சார்ந்த கோரிக்கை அல்ல. தமிழ்நாடு முழுவதும் கவனிப்பாரற்றுக் கிடக்கும் புத்தர் சிலைகளைப் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் முதல் கடமையாகும்.

தஞ்சை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களிலுள்ள புத்தர் சிலைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நானும், ஆனந்த் என்ற நண்பருமாகச் சேர்ந்து பார்வையிட்டோம். இந்தியத் தொல்பொருள் துறையினால் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிற சில சிலைகள்கூட மோசமான முறையில் புறக்கணிக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தோம். ஆயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட அரிய சிலைகளை சாலை ஓரங்களில் போட்டு வைத்திருக்கிறார்கள். பெருஞ்சேரி என்ற இடத்தில் ஒரு புத்தர் கோயில் பாழடைந்து கிடக்கிறது. ஒரு புத்தர் சிலை, பள்ளியன்றின் முன்புறம் மாணவர்கள் விளையாடும் இடத்தில் போட்டு வைக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டத்தில் ஒரு சிலை சாலையோரம் கிடக்கிறது. தலைவாசலுக்கருகில் உள்ள தியாகனூரில் இரண்டு அற்புதமான புத்தர் சிலைகள் வயலில் வேப்பமரத்தின் கீழ் புதரில் கிடக்கின்றன. இப்படி ஏராளமாகச் சொல்லலாம்.

உலகிலேயே அதிகமான சிலைகள் இருப்பது புத்தருக்குத்தான். அவற்றுள் மிக அழகான சிலைகள் தமிழ்நாட்டில் வடிக்கப்பட்டவைதான். ‘நாகப்பட்டினம் புத்தர்’ என்று ஒரு கலைமரபே இருக்கிறது. அந்த அளவுக்கு அழகான சிலைகள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. கவனிப்பின்றி போடப்பட்டிருப்பதால் பல அரிய சிலைகள் களவாடப்பட்டு இன்று அயல்நாடுகளில் பெரிய பணக்காரர்களின் சேகரிப்பில் காட்சியளிக்கின்றன.

புத்தர் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அவற்றைப் பெயர்த்துக் கொண்டுபோய் மியூசியங்களில் அடுக்குவதென்று அர்த்தமாகாது. இப்போது சிலைகள் காணப்படும் ஊர்களிலேயே அவற்றைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஊர்கள் கொண்ட வரைபடம் ஒன்றைத் (Map) தயாரித்து அவற்றை சுற்றிப்பார்க்க வசதிசெய்து தந்தால், உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும் பயணிகள் வருவது நிச்சயம். அது நமக்கு அந்நியச் செலாவணியையும் ஈட்டித்தரும்.

புத்தரது 2500-வது பரிநிர்வாண நாள் 1956-ல் கொண்டாடப்பட்டது. அப்போது நேரு பிரதமராயிருந்தார். உலகத்தின் கவனத்தை ஈர்க்கின்ற விதத்தில் அந்தக் கொண்டாட்டம் இருந்தது. அப்படி ஒர் ஆர்வம் இன்று மத்திய அரசிடம் தென்படவில்லை. அண்ணல் அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவ முடிவெடுத்திருந்த நேரம் அது. அதனால் பௌத்தமும் இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என்று ஆக்குவதற்கு அந்தக் கொண்டாட்டங்களை ஆட்சியாளர்கள் அப்போது பயன்படுத்திக்கொண்டனர். அந்த மாதிரியான நெருக்கடி எதுவும் இப்போது இல்லை. எனவே, இன்று அடக்கிவாசிக்கிறார்கள் போலும். ஆனால், முன்பு எப்போதையும்விட இன்றுதான் பௌத்த நெறிகளின் முக்கியத்துவம் கூடியிருக்கிறது. பௌத்தத்தை ஒரு மதமாகக் குறுக்கிவிடாமல் அதன் சாரத்தை ஒவ்வொருவரும் ஏற்பது அவசியம். ‘‘அறிவியல் சிந்தனையால் விழிப்படைந்த ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே நெறி பௌத்த நெறிதான்’’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டார்.

‘‘புத்தமதம் அல்லது புத்தக்கொள்கை என்று சொன்னால், அது புத்தருக்கு மட்டுமே உரிமையான கொள்கையன்று. அது அறிவுக்கு உரிமையான கொள்கை. அறிவுதான் ஆசான் என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார் புத்தர்’’ என்று குறிப்பிட்டார் பெரியார். இந்த மாபெரும் தலைவர்களின் வழிநடக்கும் தமிழக அரசு, இந்தத் தருணத்தைப் பயன்படுத்தித் தமிழுக்கும் பௌத்தத்துக்குமான உறவைப் புதுப்பிக்க முன்வர வேண்டும். வள்ளுவரைப்போல புத்தர் மீதும் பற்றுகொண்ட நமது முதல்வர் நிச்சயம் இதைச் செய்வாரென நம்புவோம்.

- ரவிக்குமார் எம்.எல்.ஏ
ஜூனியர் விகடன் 07-02-07