Sunday, September 26, 2010

இரு பாதைகள்- ஒரு தீர்மானம்

தன் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கிய கட்டத்தில் தான் நடந்து வந்த பாதை இரண்டாகப் பிரிந்தது என்று ஆங்கில மகாகவி ராபர்ட் ஃப்ரோஸ்ட் பாடிய காலத்தை வென்ற கவிதை சிலருக்கு நினைவிருக்கலாம். அந்த இரண்டு பாதைகளில் எந்தப் பாதையில் செல்வது என்ற குழப்பம் அன்று அந்தக் கவிஞனுக்கு வந்தது. ஒன்று பலரும் நடந்து போன பாதையாகத் தெரிந்தது. இன்னொன்று அதிகம் பேர் நடந்து போகாத தடமாகத் தெரிந்தது. பாதையைத் தேர்ந்தெடுத்த பின் மாற்றிக் கொள்வது சாத்தியமல்ல என்பதால் அவர் நிறைய யோசித்தார். முடிவில் அதிகம் பயணிக்காத பாதையைத் தேர்ந்தெடுத்ததாகவும் அதுவே வாழ்க்கையில் எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்தியதாகவும் ராபர்ட் ஃப்ரோஸ்ட் கூறினார்.

அது போல ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டம் ஒரு பிரபல தமிழர் வாழ்வில் வந்தது. அவர் ஒரு விஞ்ஞானி. அமெரிக்காவில் ஒரு மிக நல்ல உத்தியோகத்தில் இருந்தார். அவர் குடும்பமும் அமெரிக்காவில் தான் இருந்தது. அவர் ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். அது குறித்து நிறையவே அறிந்திருந்தார். ஒரு முறை இங்கிலாந்து சென்ற போது அது போன்ற ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் அங்குள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் ஒருவரிடம் அது குறித்து நிறைய பேசினார். அவருடைய கருத்துகளால் கவரப்பட்ட அந்த இயக்குனர் அவர்களுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் சந்தர்ப்பம் கிடைத்தால் அது குறித்து ஆராய்ச்சி செய்ய தமிழ் விஞ்ஞானியை அனுமதிப்பதாகச் சொன்னார். சில மாதங்கள் கழித்து, 1999ஆம் ஆண்டு அவருக்கு அனுமதிக் கடிதமும் அனுப்பினார்.

அந்தக் கடிதம் பார்த்த பிறகு ஆங்கிலக் கவிஞன் ராபர்ட் ஃப்ரோஸ்ட் போலவே நம் தமிழ் விஞ்ஞானியும் குழப்பத்தில் ஆழ்ந்தார். அவர் அப்போது அமெரிக்காவில் நல்ல சம்பளத்துடன் வசதியாக இருந்தார். ஆராய்ச்சிக்கு இங்கிலாந்துக்கு சென்றால் அமெரிக்காவில் கிடைக்கும் சம்பளத்தில் கிட்டத்தட்ட அறுபது சதவீதமே அவருக்கு ஊக்கத் தொகை கிடைக்கும். குடும்பத்தை அவர் அழைத்துச் செல்ல முடியாததால் குடும்பத்தினரை அவர் பிரிய வேண்டி வரும். மேலும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் செய்யப் போகும் ஆராய்ச்சி எந்த அளவு வெற்றி பெறும் என்பதும் உறுதியில்லை.

இப்படி நஷ்டங்கள் பல, லாபம் உறுதியில்லை என்ற பாதையில் செல்வதா? எந்த பிரச்னையும் இல்லாத, எதையும் இழக்க வேண்டியிராத பாதையில் செல்வதா என்ற கேள்விகள் அவர் மனதில் எழுந்தன. அந்த ஆராய்ச்சி அவர் மிகவும் விரும்பிய ஆராய்ச்சி, அந்த சந்தர்ப்பம் அவருடைய கனவை நனவாக்கும் சந்தர்ப்பம்..... கனவை இழந்து மற்ற அனைத்தையும் தக்க வைத்துக் கொள்வதா? மற்ற அனைத்தையும் தக்க வைத்துக் கொள்ள கனவை இழப்பதா?

பொதுவாக பிழைக்கத் தெரிந்தவர்களாகக் கருதப்படுபவர்கள் கனவை இழந்தாவது மற்றவற்றை தக்க வைத்துக் கொள்வார்கள். அவருடைய நண்பர்கள் சிலரும் அந்த நல்ல வருமானத்தை விட்டு குறைந்த வருமானத்திற்குச் செல்வது முட்டாள்தனம் என்றே சொன்னார்கள். ஆனால் நம் விஞ்ஞானியோ குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து கனவைத் தக்க வைத்துக் கொள்ளும் குறைவான நபர்கள் செல்லும் அந்தப் பாதையில் பயணிக்கத் தீர்மானித்தார். மிக நல்ல வருமானத்தை தியாகம் செய்து, குடும்பத்தினரைப் பிரிந்து ஆராய்ச்சி செய்யக் கிளம்பி விட்டார். சரியாகப் பத்து வருடங்கள் கழித்து 2009ல் வேதியியலில் நோபல் பரிசை அந்த ஆராய்ச்சி அவருக்கு வாங்கித் தந்தது. ஆம் அந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள் தான்.

நம் ஒவ்வொருவர் வாழ்க்கைப் பயணத்திலும் அதே போல சில கட்டங்கள் வருவதுண்டு. முன்னே பாதைகள் இரண்டாய் பிரிவதுண்டு. அந்த சமயத்தில் எந்தப் பாதையில் பயணிப்பது என்ற தீர்மானத்தை வைத்தே நம் விதி தீர்மானிக்கப்படுகிறது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இருக்கின்ற சில சில்லறை சௌகரியங்களைத் தியாகம் செய்யாமல் கனவுகளை யாரும் நனவாக்க முடியாது. நம் உண்மையான கனவுகளைத் தியாகம் செய்து நாம் நிரந்தரமான சாதனைகளை சாதித்து விட முடியாது. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அமெரிக்க வேலையிலேயே தொடர்ந்திருந்தால் உலகத்திற்கு அவர் பெயர் அறிமுகமாகி இருக்க முடியாது.

அப்படி குறைவான மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில் தோல்வியின் ஆபத்தும் நஷ்டத்தின் ஆபத்தும் இருக்கத் தான் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பொறுப்பான மனிதராக அது வரை வாழ்ந்தவர்கள் கனவின் பாதையில் செல்லும் போதும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வதில்லை. சில்லறை அசௌகரியங்களை சந்திக்க நேர்ந்த போதும் முட்டாள்தனமாக அவர்கள் நடந்து கொள்வதில்லை. அவர்கள் உழைப்பு கூடுகிறதே ஒழிய குறைவதில்லை. எனவே சற்று தாமதமானாலும் வெற்றி கண்டிப்பாக அவர்களுக்கு வந்தே தீரும். அவர்கள் ஈடுபடுவது சூதாட்டத்தில் அல்ல. சோம்பலிலும் அல்ல. கனவுகளோடு சூதும், சோம்பலும், முட்டாள்தனமும் சேர்ந்தால் தான் கனவு பொய்க்கும்.

அப்படி வாழ்க்கையை இழந்த நபர் ஒருவரையும் நான் நன்றாக அறிவேன். அவர் அரசாங்க உத்தியோகஸ்தர். நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தவர். பங்கு (shares) வணிகத்தில் ஈடுபாடு அதிகமாகிய அவருக்கு ஒருகட்டத்தில் வாங்குகிற சம்பளம் பிச்சைக்காசு என்ற அபிப்பிராயம் வந்து விட்டது. வேலையை ராஜினாமா செய்து விட்டு கிடைத்த பணம் அத்தனையையும் அதில் போட்டு ஆறே மாதத்தில் எல்லாம் தொலைத்து நடுத்தெருவில் நின்ற அவலத்தை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

ராமகிருஷ்ணனுக்கும், அவருக்கும் என்ன வித்தியாசம்? நல்ல வேலையில் ஈடுபடுபவனுக்கும், சூதாடுபவனுக்கும் இடையே இருக்கிற வித்தியாசம். நீண்டகாலக் கனவாக இருந்த ஒரு ஆராய்ச்சியைச் செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் தொடர முயற்சித்த ஒரு வெற்றியாளனுக்கும், குறுகிய காலத்தில், கஷ்டப்படாமல் நிறைய சம்பாதிக்க முயன்ற ஒரு சோம்பேறி தோல்வியாளனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தான். இந்த வித்தியாசங்களை யாரும் அலட்சியப்படுத்தி விடக்கூடாது.

உங்கள் வாழ்விலும் எப்போது வேண்டுமானாலும் செல்கின்ற பாதை இரு பாதையாகப் பிரியலாம். அப்போது எல்லோரும் பயணிக்கிற பாதையில் செல்வதே பாதுகாப்பு என்று தோன்றலாம். ஆனால் மற்ற பாதை உங்கள் கனவின் பாதையாக இருக்குமானால், சோம்பலாலும், பொறுப்பற்ற தன்மையாலும் நீங்கள் உந்தப்படாதவராக இருப்பவரானால், யாரும் அதிகம் போகாத பாதையானாலும் அந்தப் பாதையே நல்லது. அதில் உற்சாகத்துடன் செல்லுங்கள், உழைக்கத் தயாராகச் செல்லுங்கள். உங்கள் கனவு நனவாவது மட்டுமல்ல, நீங்கள் வாழ்வதன் பொருளை அந்தப் பாதையில் தான் உணர முடியும்.

-என்.கணேசன்

No comments:

Post a Comment