ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் 'சூழல் சந்திப்பு' 26.07.2011 அன்று மாலை 6:30 மணியளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் நடைடிபற்றது.
இதில், 'வன மேலாண்மையில் சவால்கள் - ஒரு களப் பணியாளரின் பார்வை' என்ற தலைப்பில் திரு.மொ.நஸீர், வனச்சரக அலுவலர் மற்றும் மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சிக்கு திரு. மனோகரன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு வன அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் நஸீர் பேசியதாவது "சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வனத்துறையை அத்தியாசியத் துறையாக மாற்ற வேண்டும்' என, தமிழ்நாடு வன அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, வனத்துறை புறக்கணிக்கப்பட்ட துறையாகவே இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும் பரந்து விரிந்துள்ள வனத்தை காக்க, 5,000 வனத்துறை ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். வனத்தை காப்பாற்றிய வனத்துறையின் பணி, இப்போது, வன உயிர்களிடமிருந்து மக்களையும், மக்களிடமிருந்து அவற்றையும் காக்க வேண்டிய துறையாக மாறியுள்ளது. ஆனால், இத்துறைக்கு உரிய அங்கீகாரம், அதிகாரம் எதுவுமே இல்லை.
வனத்தை காப்பாற்ற இரவு, பகலாக அலையும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு மாதச்சம்பளம், 2,314 ரூபாய் மட்டுமே. உயிரைப் பணயம் வைத்து யானையைத் துரத்தும் ஊழியர்க்கும், அதே சம்பளம்தான். இவர்களைப் போலவே, வனக்காப்பாளர், வனக்காவலர்களுக்கும் மிகக்குறைவான சம்பளமே தரப்படுகிறது. போலீஸ் பணிக்கு பத்தாம் வகுப்புப் படித்திருந்தால் போதும்; வனக்காப்பாளருக்கு பிளஸ் 2 சயின்ஸ் குரூப் படித்திருக்க வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு போலீசுக்குத் தரும் அடிப்படைச் சம்பளம் கூட வனக்காப்பாளர்க்கு தரப்படுவதில்லை. வேட்டைத் தடுப்புக்காவலர்களுக்கு சீருடை கூட தரப்படுவதில்லை. வனச்சரகர், வனவர் போன்றோருக்கு சீருடைப் படியாக 1600 ரூபாயும், களப்பணியாளர்க்கு 800 ரூபாயும் தரப்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதுவும் வழங்கப்படுவதில்லை. துப்பாக்கிகள் இருந்தால், தோட்டாக்கள் இல்லை; தோட்டா இருப்பவரிடம் துப்பாக்கி இருப்பதில்லை. வனத்துறைப் பணியாளர் தேர்வு முறையே தவறாயிருக்கிறது. போலீஸ் பணிக்கு 23 வயதுக்குள்தான் ஆள் எடுக்கின்றனர். ஆனால், வனக்காவலர் பணிக்கு வேலை வாய்ப்பு அலுவலக மூப்பு அடிப்படையில் எடுப்பதால், அவர்கள் பணிக்கு வரும்போதே 35லிருந்து 37 வயதாகி விடுகிறது. நோய்கள் துவங்கும் காலத்தில் பணிக்கு வரும் அவர்களால், களப்பணியைச் சிறப்பாகச் செய்ய முடிவதில்லை. வனக்குற்றங்கள் அதிகரிக்க இதுவே காரணம். வனத்துறைக்கான ஆட்களை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான், வனத்துறையின் அடித்தளம் பலமாகும்; புவி வெப்பமயமாதல், சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வனத்துறையை அத்தியாவசியத் துறைகளின் கீழ் கொண்டு வர வேண்டும். வனச்சட்டப் புத்தகத்தை தமிழில் வெளியிட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள், வேட்டைக்காரர்களிடம் இருக்கும் அளவுக்கு எங்களிடம் தகவல் தொடர்பு வசதிகளோ, வாகன வசதிகளோ, தற்காப்பு ஆயுதங்களோ இருப்பதில்லை. அதனால், அவர்களை எதிர்கொள்வது பெரும் சவாலாகவுள்ளது. இவ்வாறு, நஸீர் பேசினார். மனோகர் தலைமை வகித்தார். அமைப்பின் தலைவர் காளிதாசன் வரவேற்றார்; செயலர் அவை நாயகன் நன்றி கூறினார்.
source: osai
No comments:
Post a Comment